மௌலவி எம்.எம். அஹ்மத் முபாரக்

மௌலவி எம்.எம். அஹ்மத் முபாரக்:
சமூக முன்னேற்றத்துக்காக உழைத்த ஆளுமை!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் அதன் முன்னாள் தலைவரும் பிரபல மூத்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களது மறைவுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது.

மல்வானையைப் பிறப்பிடமாகக் கொண்ட மௌலவி அஹ்மத் முபாரக் (மதனி) அவர்கள் கொச்சிக்கடை பலகத்துறையில் திருமணம் செய்தார். மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து பட்டதாரியாக வெளியேறினார். அதன் பின்னர் மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் அதிபராகவும் நீண்ட காலம் கடமையாற்றி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மார்க்கக் கல்வி போதித்து ஆலிம்களை உருவாக்குவதில் அயராது உழைத்து வந்தார்.

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் நீண்ட காலமாக தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் அபிமானம் பெற்ற முபாரக் மௌலவி அவர்கள் நாடளாவிய ரீதியில் குத்பா பிரசங்கங்களையும் நிகழ்த்தி வந்தார். இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றி அதன் முன்னேற்றத்துக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் பல காத்திரமான பணிகளை ஆற்றியுள்ள முபாரக் மௌலவி அவர்கள், அதன் தலைவராக இருந்தபோது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறுசவால்களை நிதானமாக கையாண்டார்.

மௌலவி அஹ்மத் முபாரக் பழகுவதற்கு இனிமையானவர். நடுநிலையான போக்குடையவர். எவருடனும் முரண்பட்டுக் கொள்ளாத வகையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்கும் ஆற்றல் படைத்தவர். எளிமையாக வாழ்ந்தவர். உயர்ந்த பண்பாடுகளுளைக் கொண்டவர் என்பதை அவருடன் பழகியவர்கள் நன்கறிவர்.

உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் பல மாநாடுகளில் பங்குபற்றியுள்ள மௌலவி முபாரக் தேசிய மட்ட சிவில் அமைப்புக்களுடன் இணைந்தும் பணியாற்றினார். ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் நல்லுறவைப் பேணி வந்த அவர், இஸ்லாமிய அமைப்புகளின் நன்மதிப்பை பெற்ற ஒருவராகவும் திகழ்ந்தார்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார் உறவினர், ஆலிம்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு அல்லாஹுத் தஆலா அழகிய பொறுமையையும் ஆறுதலையையும் வழங்க வேண்டுமென்றும் அவரது சன்மார்க்க, சமூகநலப் பணிகளை ஏற்று அங்கீகரித்து அருள் புரிய வேண்டுமெனவும் உயர்வான சுவனத்தை அருள வேண்டுமெனவும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பிரார்த்திக்கிறது.

அஷ்ஷெய்ஹ் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி

தலைவர்,

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top