2020 புதிய அரசாங்கத்துதிற்கு எமது வாழ்த்துக்கள்

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தை அமைத்திருக்கும் புதிய அரசாங்கத்துதிற்கு எமது வாழ்த்துக்கள்

 

  • நாட்டின் இறைமையையும் மக்களின் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துகின்ற யாப்பு
  • உலக நிலைவரங்களையும் நாட்டு நடப்புகளையும் புரிந்து கொண்டு தேசப்பற்றுடன் வாழ்கின்ற மக்கள்
  • அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற தேசத் தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள்
  • நிலையான அபிவிருத்தியை முன்கொண்டு செல்வதற்கான ஒன்றிணைக்கப்பட்ட திட்டம்
  • ஊழல், மோசடிகள் அற்ற நிர்வாகம்… என்பன அமையப்பெற்று இவற்றோடு ஸ்திரமான அரசாங்கமும் அமைந்து விட்டால் எந்த ஒரு நாடும் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.

ஒரு ஸ்திரமான அரசாங்கம் மட்டும் அமைந்துவிட்டால்கூட மேலுள்ள சாதகமான அம்சங்களில் குறைகளை நிவர்த்தி செய்து நிறைகளைக் கண்டுவிடலாம்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் மிக மோசமாகப் பாதிப்படைந்திருந்த ஜப்பான், உலகில் அவ்வாறுதான் தனது குறைகளை நிறைகளாக மாற்றி முன்னேறியதைப் பார்க்கின்றோம்.

இலங்கையும் 30 வருட உள்நாட்டு யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டை அதிலிருந்து மீட்டெடுத்த பெருமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையே சேரும். எனினும், தொடர்ந்து நாட்டை வெற்றிகரமான பாதையில் முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலைகள் தோன்றின. அவருக்கு முன்னரும் ஸ்திரமான அரசாங்கங்கள் அவ்வப்போது உருவாகியிருந்தாலும் அந்த அரசாங்கங்கள் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து, வெற்றிப் பாதையில் அதனை முன்கொண்டு செல்லவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை ஆகும்.

தற்போது நாட்டுக்கு மீண்டும் ஒரு ஸ்திரமான அரசாங்கம் கிடைத்திருக்கின்றது. அதன் தலைவர்களாக திரு. கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களுமே இருக்கின்றார்கள். இவர்கள் நாட்டைக் காப்பாற்றியவர்கள் என்ற பெயரை வரலாற்றில் பதித்துக் கொண்டவர்கள். தற்போது அவர்களுக்கு முன்னால் இருக்கின்ற அடுத்த பொறுப்பு அபிவிருத்தியடைந்த, பலம் பொருந்தியதொரு நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை சகல அபிவிருத்திகளோடும் பலம் பொருந்தியதொரு நாடாக மாற வேண்டிய அவசியமும் நிர்ப்பந்தமும் அதற்கு இருக்கின்றது. காரணம், உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததோர் இடத்தில் அது அமையப் பெற்றிருப்பதாகும்.

அந்த இட அமைவு காரணமாக உலகில் இருக்கின்ற வல்லரசுகள் ஒவ்வொன்றினதும் ஒரு கண் இலங்கை மீதும் இருக்கின்றது. தங்களது வல்லரசு நலன்களுக்காக இலங்கையைப் பயன்படுத்தும் நோக்கில் தமது மூக்கை நுழைக்க ஒவ்வொருவரும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை எந்த சக்திக்கும் அடிபணியாத சுதந்திர நாடாகவும் தனக்கே உரிய வரலாற்று கலை, கலாசார பன்மைத்துவ மற்றும் ஜனநாயகப் பாரம்பரியங்களைப் பேணிய நாடாகவும் அதேவேளை அபிவிருத்தியடைந்த நாடாகவும் இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் .

எனவே, தற்போது அமைந்திருக்கின்ற ஸ்திரமான அரசாங்கம் இத்தகையதொரு பாதையில் முன்னேறவும் அதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையப் பெறவும் உளமாற வாழ்த்துகின்றோம். அத்தகையதொரு முனைப்புக் கொண்டதாக இந்த அரசாங்கம் இருக்கிறது என்றும் நம்புகின்றோம்.

சட்டத்தரணி பாரிஸ் சாலி
LL.M (Staffordshire) LL.B (Colombo) & Attorney-at-Law
பொதுச் செயலாளர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top