ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.எம்.எம். மன்சூர்

 

கல்வியலாளர், சமுக செயற்பாட்டாளர் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.எம்.எம். மன்சூர் அவர்கள் இறைவனிடம் மீண்டார்.

கண்டி மாவட்டத்தில் உடுநுவர தேர்தல் தொகுதியில் வெலம்பொட கிராமத்தின் முதலாவது பட்டதாரியான ஏ.எம்.எம். மன்சூர் அவர்கள் கடந்த 2021.12.29 ஆம் திகதி கம்பளையில் அன்னாரின் வீட்டில் காலமாகி 30 ஆம் திகதி காலை கம்பளை டவுண் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அப்துல் மஜீத் தம்பதிகளின் மகனான இவர் ஆரம்பக் கல்வி முதல் சாதாரண தரம் வரை தனது தாயாரின் ஊரான தெஹியங்கையில் அல்-அஸ்ஹர் மகாவித்தியாலயத்தில் பயின்றார். உயர்தர வகுப்புக்காக கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் இணைந்தார். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மரஹூம் ஏ.எம்.எம். மன்சூர் கல்விமாணிப் பட்டம் (B.Ed) பெற்று வெலம்பொடைக் கிராமத்தின் முதலாவது பட்டதாரியாக 1968 ல் வெளியானார்.

அதனைத் தொடர்ந்து வெலிகம அரபா கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றார். 1970இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராக நியமனம் பெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளராகக் கடமை ஏற்றார். அங்கு ஒரு தலைசிறந்த விரிவுரையாளராக, முன்மாதிரி மிக்க சமுக மாற்றத்தின் முகவராக பன்முக ஆளுமைகளுடன் கடமையாற்றியதாக அவரிடம் பயின்ற ஆசிரியர்கள் இன்றும் புகழந்துரைக்கின்றனர். அக்காலப்பகுதியில் அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பாடசாலைகளுடன் தொடர்புகொண்டு அப்பகுதியின் கல்வி முன்னேற்றத்துக்கு தன்னால் முடியுமானவற்றைச் செய்தார்.

1978 இல் அட்டாளைச்சேனையிலிருந்து அளுத்கமை ஆசிரியர் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார். அதனைத் தொடர்ந்து அல்ஜீரியாவில் ஆசிரியர் நியமனம் பெற்று சில வருடங்கள் அங்கு வசித்தார். அங்கிருந்து நாடு திரும்பிய அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துணைத் துறையில் 1996 முதல் மூன்று வருடங்கள் வரை கடமையாற்றினார்.

பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய காலத்தில் இருந்தே அவர் வெலம்பொட கிராமத்தின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்தார். இளைஞர்களை ஒன்று திரட்டி சமூக சீர்திருத்த கருத்துக்களை வளர்த்தார். பள்ளிவாசலுடன் நெருங்கிய தொடர்புடன் செயற்பட்டார். ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராக அவர் கடமை ஏற்றபோது ஏனையவர்களின் ஒத்துழைப்புடன் நிர்வாகத்திற்கான ஒரு அமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். சில மாற்றங்களுடன் இன்று வரை நடைமுறையில் உள்ள அந்த அமைப்புச் சட்டத்தில் ஊரின் முன்னேற்றத்துக்காக பல துறைகள் இனங்காணப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள், குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பித்ரா மற்றும் ஸகாத்தை கூட்டாக வழங்கும் நடைமுறையை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டார். கூட்டாக ஸகாத் வழங்கும் ஊர்களில் இன்றும் வெலம்பொட ஒரு எடுத்துக்காட்டாகவும் முன்னோடியாகவும் இருப்பதற்கு அவரின் பங்களிப்பு காரணமாக அமைந்தது.

அவர் கம்பளை நகர பள்ளிவாசலிலும் கூட்டு ஸகாத் முறையை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றினார். பல ஆலோசனைக் கூட்டங்களின் பின் 2016 இல் இத்திட்டம் அங்கு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துத் துறையில் அவர் ஆர்வம் காட்டியமை 1966-1967 இல் ஹெம்மாதகமை மடுல்போவையில் வெளியிடப்பட்ட \’அறிவமுதம்\’ என்ற கையெழுத்து சஞ்சிகையில் அவர் \’ஹல்லாஜ்\’ என்ற புனைப்பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியது நினைவு படுத்தப்பட வேண்டியதொன்றாகும். மிக்க தாக்கத்தை ஏற்படுத்திய அவ்வாக்கம் அவரின் சிந்தனைத்திறன் எழுத்தாற்றலை கட்டியங் கூறியது. பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் அல்ஹஸனாத்திலும் அவர் கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். 2011 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இதழ்களில் அவர் எழுதிய \’கல்வியை இஸ்லாமிய மயப்படுத்தல்\’ என்ற தலைப்பிலான கட்டுரை இன்றும் வாசித்துப் பயன்பெற முடியுமான ஒன்றாகும். ஆழமான கருத்துக்களை எளிமையாக கவிதைகளில் வடிக்கும் திறமை அவரிடம் இருந்தது. அதற்கேற்றாற் போல் சிம்மக் குரலும் அவருக்கு வாய்த்திருந்தது.

பாடசாலைகளுக்கும் மற்றும் நூல் வெளியீட்டு விழாக்களுக்கும் அவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமாக்களில் அவர் ஒரு பிரதான பேச்சாளராக இருந்தார். கொழும்பிலுள்ள பல சமூக நிறுவனங்களும் அவரை தமது விழாக்களில் பேசுவதற்காக அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறந்த மொழி வளமும் காந்தக் குரலும் கலந்த அவரது பேச்சை எவ்வளவு நேரமானாலும் தெவிட்டாது கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று பலர் கூறுவதை நாமறிவோம்.

அவர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் 1960 களின் இறுதிப் பகுதியில் இணைந்து கொண்டார். அதன் மத்திய மஜ்லிஸுஷ் ஷூரா உறுப்பினராகவும் சில காலம் அதன் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவர் நோய்வாய்ப்படும் வரை அல் மஜ்லிஸ் உறுப்பினராக இருந்தார்.

முன்பள்ளிக் கல்வியை இஸ்லாமிய மயமாக்குவதில் அவர் ஆர்வம் காட்டினார். இன்ஸைட் கல்வி நிறுவத்தினால் நடத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி நெறியில் அவர் ஒரு விரிவுரையாளராகக் கலந்து கொண்டார். வேறு பல இடங்களிலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளில் பயிற்சி நெறிகளில் வளவாளராக பங்கேற்றிருந்தார்.

மாவனல்லையில் இயங்கிய ஹதீஸ் துறை உயர் கல்வி நிறுவனமான ஸபிய்யா பவுண்டேஷனின் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார். இஸ்லாமிய கல்வித்துறையில் அவருக்கிருந்த ஆர்வம் கதீஜதுல் குப்ரா பெண்கள் அரபுக்கல்லூரி ஆரம்பிப்பதில் முனைப்பாக ஈடுபட காரணமாக அமைந்தது. பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களையும் பிரமுகர்களையும் ஒன்றிணைத்து வட்டதெனியவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கி வரும் கதீஜதுல் குப்ராவின் ஸ்தாபகத் தலைவராக அவர் பல வருடங்கள் சேவையாற்றினார். அதன் நிர்வாகியாக மட்டுமன்றி அவ்வப்போது விரிவுரைகளை நிகழ்த்துவதிலும் அவர் ஈடுபட்டார். அந்தக் கல்லூரியில் படித்த மாணவிகள் இன்று பட்டதாரிகளாகவும் ஆசிரியர்களாகவும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

77 வருடங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த அவர் அறிவும் ஆன்மிகமும் அமலும் ஒருங்கே அமையப்பெற்ற, சகலருடனும் அன்பாகப் பழகும் எளிமையான ஓர் அறிஞராக முத்திரை பதித்து சமகால மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார்.

மர்ஹூம் ஏ.எம்.எம். மன்சூர் அவர்கள் தனது இஸ்லாமிய அறிவு, அது நிலைபெற வேண்டும் என்ற வேணவா, தமது பன்முக ஆளுமை, போன்றவற்றால் சமகால தலைமுறையினரையும் செதுக்கிய சிற்பி என்றால் அது மிகையன்று.

அவரது மறுமை வாழ்வு சிறப்பானதாக அமையவும் அவரது சேவைகளை அங்கீகரிக்கவும் இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம்.

 

M.H.M. Hasan
Asst. General Secretary
Sri Lanka Jama\’athe Islami

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top