கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரின் மறைவு தொடர்பாக…

கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரை இலங்கை முஸ்லிம் சமூகம் எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும்!
.

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளரும் அரிதான அறிவாளுமையுமான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் மறைவு பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது, இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த பன்முக ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்திருக்கிறது.
கல்வி ரீதியில் பெரும் புரட்சியொன்றை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யாவின் உருவாக்கத்தில் ஆரம்பம் தொட்டு ஈடுபாடு கொண்டது மாத்திரமன்றி, அதனை வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் அவருக்காக பல வாய்ப்புக்கள் காத்திருந்தபோதும், ஜாமிஆ நளீமிய்யாவின் தலைமைப் பொறுப்பை சுமந்து கொண்டமை அவரது சமூக உணர்வுக்கும் அர்ப்பணிப்புக்கும் போதுமான சான்றாகும்.

தமிழ், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் அவர் பெற்றிருந்த புலமை, அவரது பன்முக ஆளுமை, அனுபவம், அவர் பெற்றிருந்த கல்வித் தராதரம் என்பன நளீமிய்யாவின் வளர்ச்சியில் அவரை ஒரு மைல்கல்லாக்கியது என்றால் மிகையாகது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியாருடன் இணைந்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, சமூகப் பண்பாட்டுப் பெறுமானங்கள் தொடர்பில் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், ஏ.எம்.ஏ. அஸீஸ், எம்.எம்.எம். மஹ்றூப் வரிசையில் பெரிய பங்கினைச் செலுத்திய அறிஞராகவும் விளங்கினார்.

“Muslims of Sri Lanka- Avenues to Antiquity” எனும் வரலாற்று நூலைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட ஆய்வுக் குழுவினருக்கு தலைமை தாங்கிய கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இலங்கை முஸ்லிம்களால் என்றென்றும் நன்றியோடு நினைவுகூரத்தக்கவர்.

மட்டுமன்றி, இஸ்லாமியக் கலைகள், சமூகவியல் அம்சங்கள், வரலாறு, இலக்கியம் முதலான பல்வேறு துறைகளில் பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்துக்குப் பயனுள்ள பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் அரிய பொக்கிஷங்களாகத் தந்துள்ளார். சர்வதேசத் தரம் வாய்ந்த இவரது கட்டுரைகள் பல சர்வதேச சஞ்சிககைளில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சரித்திரச் சான்றுகளும் தர்க்க ரீதியான அணுகுமுறைகளும் அவரது உரைகளையும் எழுத்துக்களையும் அழகுபடுத்தின.

ஜாமிஆவின் வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்படும் காலாண்டு இஸ்லாமிய சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’ யின் ஆலோசகராகவும் பின்னர் அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்து கடைசி வரை பங்களிப்புச் செய்து வந்தார்.

தேசிய மட்டத்திலான பல அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிலும் அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகித்து வந்த கலாநிதி சுக்ரி, அவற்றுக்கூடாக தனது நாட்டுக்கான பங்களிப்பையும் நல்கியிருக்கின்றார். யுனெஸ்கோ நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய கவுன்ஸில், களனிப் பல்கலைக்கழக கவுன்ஸில், அரச மொழிகளுக்கான கமிஷன், மனித உரிமைக் கமிஷனின் தென் மாகாண கமிட்டி, குற்றத் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் கவுன்ஸில், தொல்பொருள் ஆய்வுக்கான பட்டப் பின்படிப்பு நிறுவனத்தின் நிருவாக சபை, தேசிய அரும்பொருட்காட்சியகத்தின் ஆலோசனை சபை, நூலக சேவைகள் சபை முதலான பல்வேறு தேசிய அமைப்புக்களில் அங்கத்தவராக இருந்து அரும் பணியாற்றியுள்ளார்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறை வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களுள் முக்கியமானவர் கலாநிதி சுக்ரி.

இளமைக் காலம் முதலே சுதந்திரமாக நின்று இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டு வந்த கலாநிதி சுக்ரி அவர்கள், இஸ்லாமிய இயக்கப் பணிகளிலும் பங்கேற்க தவறவில்லை. இலங்கை இஸ்லாமிய இயக்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகள், கல்வி முகாம்கள் முதலானவற்றில் கலந்து கொண்டு தனது காத்திரமான அறிவுப் பங்களிப்பை நல்கி வந்திருக்கின்றார்.

எளிமை, நிதானம், அர்ப்பணிப்பு, மனித நேயம், நன்றியுணர்வு, பிறரை மதித்து இன்முகத்தோடு வரவேற்றல்… முதலான உயர் பண்புகளைக் கொண்ட கலாநிதி சுக்ரி அவர்கள், “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவரை அல்லாஹ் உயர்வடையச் செய்கிறான்’’ என்ற ஹதீஸுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகவும் விளங்கினார்.

சுருங்கக் கூறின், கலாநிதி சுக்ரி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு பெரும் புலமைச் சொத்து. கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரை இலங்கை முஸ்லிம் சமூகம் எப்போதும் நன்றியுடன் நினைவுகூரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களையும் ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்குவானாக! அவரது பிரிவுத் துயரால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள், அவரை நேசித்தவர்கள் அனைவருக்கும் ஆறுதலையைலும் அழகிய பொறுமையையும் நல்குவானாக!


சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ்
பொதுச் செயலாளர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

19 May 2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top