கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்திப்போம்
இன்று உலகளாவிய ரீதியில் சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டோர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 32 இலட்சம் பேரளவில் மரணித்துள்ளனர். எமது நாட்டைப் பொறுத்தவரை மூன்றாவது தடவையாகவும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதாகவும் நாளொன்றுக்கு சுமார் 1800 பேரளவில் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் நாடு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்த வண்ணமுள்ளனர். இதுவரை (08.05.2021 @ 12:00) 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அதன் காரணமாக 764 பேர் மரணித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொவிட் 19 பரவலைத் தடுப்பதில் சுகாதாரத் துறையினர் பொது மக்களுக்கு வழங்கும் வழிகாட்டல்கள், ஆலோசனைகளைப் பின்பற்றி தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
உலகத்திலிருந்து குறிப்பாக எமது நாட்டிலிருந்து கொவிட் 19 தொற்று முற்றாக நீங்கும் வரை இந்த சுகாதார ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதில் கரிசனை செலுத்துவதன் மூலம் நாம் எம்மையும் எமது குடும்பத்தினரையும் எமது நாட்டையும் கொவிட் 19 தொற்றிலிருந்து இறைவன் அருளால் பாதுகாக்க முடியும்.
குறிப்பாக புனித ரமழான் இறுதிப் பத்திலிருக்கும் நாம் துஆ, திக்ர், இஸ்திஃபார் மற்றும் ஸதகா முதலான நல்லமல்களில் ஈடுபடுவதுடன்
இரவு நேரங்களில் நின்று வணங்கி எமக்காகவும் முழு உலக மக்களுக்காகவும் விஷேடமான துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.
முடியுமான முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டு வல்ல இறைவனிடம் முழுமையாக பொறுப்புச் சாட்டுவோம். அவனிடம் பிரார்த்திப்போம். எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா இது போன்ற கொடிய நோய்களிலிருந்து நம் தாய் நாட்டு மக்களையும் முழு உலக மக்களையும் பாதுகாக்க அவனே போதுமானவன்!
அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
08.05.2021